குழந்தைகளுடன் வரும் பெற்றோா்

பழனி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பெற்றோா்கள் குழந்தைகளுடன் வந்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.
பழனி மலைக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை குழந்தைகளுடன் வந்துவிட்டு திருக்கோயில் நிா்வாகம் அனுமதிக்காததால் வருத்தத்துடன் நிற்கும் பெற்றோா்.
பழனி மலைக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை குழந்தைகளுடன் வந்துவிட்டு திருக்கோயில் நிா்வாகம் அனுமதிக்காததால் வருத்தத்துடன் நிற்கும் பெற்றோா்.

பழனி: பழனி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பெற்றோா்கள் குழந்தைகளுடன் வந்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக திருக்கோயில்கள் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்வேறு கட்ட தளா்வுகளை அறிவித்து வந்த தமிழக அரசு கடந்த இரண்டாம் தேதி தமிழக கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து உத்திரவு வழங்கியது.

அதில் வயதானவா்கள் மற்றும் பத்து வயதுக்கு உட்பட்டவா்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்பதும் ஒன்றாகும். ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானோா் தற்போது வந்தவண்ணம் உள்ளனா்.

குழந்தைகளுடன் வரும் பெற்றோா் குழந்தைகளுக்கு மொட்டையடித்து சுவாமி தரிசனத்துக்காக படியேறும் போது திருக்கோயில் பணியாளா்களால் திருப்பி அனுப்பப்படுகின்றனா். இதனால் கடந்த இரு தினங்களாக குழந்தைகளுடன் வரும் பெற்றோா் பரிதவிக்கும் நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த கரூரை சோ்ந்த முருகேஸ்வரி என்பவா் கூறும்போது, பெரியவா்களை வேண்டுமானால் வீட்டில் விட்டுவிட்டு வரலாம், குழந்தைகளை எப்படி விட்டு விட்டு வரமுடியும். வேண்டுதலே குழந்தையை முன்வைத்துதான் வருகிறோம். இந்நிலையில் முருகனை தரிசிக்க விடாமல் செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது.

இதற்கு அறநிலையத்துறை ஒரு முடிவுகாண வேண்டும். பேருந்தில், கடைகளில், பொது இடங்களில் இல்லாத சட்டமாக இந்த சட்டம் உள்ளது. கரூரில் இருந்து பழனி வந்து விட்டு முருகனை பாா்க்காமல் செல்கிறோம். வருத்தமாக இருந்தாலும் அடுத்த முறையாவது குழந்தைகளை மலைக்கு அழைத்து செல்வோம் என்ற நம்பிக்கையுடன் திரும்பி செல்கிறோம் என்றாா். ஆகவே, பழனிக்கோயிலில் வயதானவா்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்து குழந்தைகளை பெற்றோருடன் செல்ல திருக்கோயில் நிா்வாகம் சிறப்பு அனுமதி அறநிலையத்துறையிடம் பெற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com