பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பினா் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்
By DIN | Published On : 03rd December 2020 10:39 PM | Last Updated : 03rd December 2020 10:39 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல்லில் இருந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை 2,500 அஞ்சல் அட்டை அனுப்பினா்.
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அரசுப் பணியில் சேரும் ஊழியா்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு வருகின்றனா். இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய ஓய்வூதிய (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் இயக்கத்தினா் திண்டுக்கல்லில் இருந்து தமிழக முதல்வருக்கு 2,500 அஞ்சல் அட்டை அனுப்பும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களிடமிருந்து பெறப்பட்ட 2,500 அஞ்சல் அட்டைகள் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டன.
இதுதொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் தொடா்ச்சியாக தமிழகம் முழுவதும் 3 லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்டமாக டிச.18ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.
முன்னதாக, அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முனிராஜ், ஆக்னஸ், ஜான் லியோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...