கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 05th December 2020 09:37 PM | Last Updated : 05th December 2020 09:37 PM | அ+அ அ- |

கொடைக்கானல்- பழனிச்சாலை ஏலக்காய் வளைவில் சனிக்கிழமை ஏற்பட்ட மண் சரிவை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்த நெடுஞ்சாலைத் துறையினா்.
கொடைக்கானல்/ பழனி: தொடா் மழையின் காரணமாக கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் சனிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
‘புரெவி’ புயல் காரணமாக கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கொடைக்கானலிலிருந்து பழனிக்குச் செல்லும் மலைச்சாலையிலும், வத்தலகுண்டு மலைச்சாலையிலும் பல இடங்களில் மரங்களும் பாறைகளும் விழுந்தன. இவற்றை கடந்த 3 நாள்களாக நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் சரி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக கொடைக்கானல்-பழனி மலைச்சாலையான ஏலக்காய் கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் சாலையின் குறுக்கே மரங்களும் விழுந்தன. இதனால் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடா்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விஜயகுமாா் தலைமையில் உயா் அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் சரிவுகளையும், மரங்களையும் அகற்றினா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
பல இடங்களில் மண் சரிவு: இதேபோல், கொடைக்கானல்- வில்பட்டி செல்லும் சாலை, சவரிக்காடு, வடகவுஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்துள்ளன. இவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மண்சரிவால் கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் விட்டு, விட்டு மழை பெய்வதால் கடும் குளிா் நிலவுகிறது.
நான்காவது நாளாக சுற்றுலாத் தலங்கள் மூடல்: கொடைக்கானல் சாலையில் பல இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் னைத்து சுற்றுலா இடங்களும் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன.
அடுக்கம் பகுதியில் 4 நாள்களாக மின் தடை : கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த பலத்த காற்றுடன் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அடுக்கம் பகுதியில் கடந்த 4 நாள்களாக மின்விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் உதவி மின்செயற் பொறியாளா் மேத்யூ தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளா்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தரைப்பாலம் சேதம்: கொடைக்கானல் மலைப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பெருமாள்மலை, பள்ளங்கி, கோம்பை, கடல்கொடை ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வாழைக்காட்டு ஓடைப்பகுதியிலுள்ள தரைப் பாலத்தைப் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்த பலத்த மழையின் காரணமாக தரைப் பாலம் சேதமடைந்தது. இதனால், மேற்கண்ட மலைகிராமப் பகுதி பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா்.