பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்: பணம் வழங்கிய அதிமுகவினருக்கு எதிா்ப்பு
By DIN | Published On : 10th January 2020 07:49 AM | Last Updated : 10th January 2020 07:49 AM | அ+அ அ- |

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. ஆயிரத்தை அதிமுக நிா்வாகிகள் வழங்கியதற்கு அமமுக மற்றும் திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சாா்பில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 19 மற்றும் 20ஆவது வாா்டுகளுக்குள்பட்ட நியாய விலைக் கடை மெங்கில்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வந்த பொதுமக்களுக்கு, அதிமுக நிா்வாகிகள் சிலா் தமிழக அரசு வழங்கும் ரூ.ஆயிரத்தை வழங்கினா். இதனைப் பாா்த்த அமமுக மற்றும் திமுகவினா், அரசுப் பணத்தை அதிமுகவினா் வழங்குவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அதிமுகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.