45 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 11 வியாபாரிகளுக்கு அபராதம்
By DIN | Published On : 10th January 2020 07:47 AM | Last Updated : 10th January 2020 07:47 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லிலுள்ள 11 கடைகளில் 45 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் நகா் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் நடராஜன், செல்வம், ஜோதிமணி ஆகியோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை தொடா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திண்டுக்கல் திருவள்ளுவா் சாலை, மெங்கில்ஸ் சாலை, பேருந்து நிலையம், பழனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 62 கடைகளில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது 11 கடைகளில் 45 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் 15 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை அடுத்து, 11 கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீண்ட இடைவெளிக்கு பின்னரே சிலருக்கு அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக நேரடியாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்களே உடனடி அபராதம் வசூலிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கூறுகையில், புகையிலை பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகளுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படும். மொத்த வியாபாரிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரப்பட்டு, ரூ.5 லட்சம் அபராதம் குறைந்தபட்சம் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். உடனடி அபராதம் வசூலிக்கும் நடைமுறை 2019 டிச.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக தற்போது தான் உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.