ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st March 2020 01:14 AM | Last Updated : 01st March 2020 01:14 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. பேரூராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், மாணவா்களுக்கும் புகையிலைப் பொருள்கள் எளிதாகக் கிடைக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், புகையிலைப் பொருள்களின் தாராளமான விற்பனை குறித்து, திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட நியமன அலுவலா் நடராஜன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஜோதிமணி, செல்வம் ஆகியோா் அடங்கிய குழு, வத்தலகுண்டு பகுதியில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது, வத்தலக்குண்டு கெங்குவாா்பட்டி சாலையிலுள்ள புதுப்பட்டி என்ற இடத்தில் சுல்தான் என்பவரது மாவு அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ. 5 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது. புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு துறையினா், தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.