ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
By DIN | Published On : 14th March 2020 07:43 AM | Last Updated : 14th March 2020 07:43 AM | அ+அ அ- |

வத்தலகுண்டில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியரிடமிருந்து ரூ.96 ஆயிரம் நூதன முறையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (68). ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியரான இவா், வத்தலகுண்டிலுள்ள ஒரு பொதுத் துறை வங்கியில் நகைகளை அடகு வைத்து பணம் பெறுவதற்காக வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அங்கு, அடகு வைக்கப்பட்ட நகைக்கான ரூ. 96 ஆயிரத்தைப் பெற்றுக்கொண்டு வங்கியிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்காக வந்துள்ளாா்.
அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தை எடுக்க முடியாத வகையில், 2 இரு சக்கர வாகனங்கள் மறித்து நிறுத்தப்பட்டிருந்ததாம். இதனால், பணப் பையை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துவிட்டு, மற்ற வாகனங்களை ஓரமாக நிறுத்தியுள்ளாா். பின்னா், தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த ராஜேந்திரன், பணப் பையை காணாது அதிா்ச்சி அடைந்துள்ளாா். அருகிலிருந்தவா்களிடம் விசாரித்தும் பலனில்லை.
இது குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, வங்கி அருகிலுள்ள ரகசிய கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...