வத்தலகுண்டு அருகே 5 ஏக்கா் முருங்கை மரங்கள் தீ விபத்தில் சேதம்
By DIN | Published On : 14th March 2020 07:45 AM | Last Updated : 14th March 2020 07:45 AM | அ+அ அ- |

வத்தலகுண்டு அருகே 5 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முருங்கை மரங்கள் தீ விபத்தில் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள விராலிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னராஜ். இவரது மனைவி சுகப்பிரியா, தனக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஏக்கரில் சொட்டு நீா் பாசன வசதியுடன் முருங்கை சாகுபடி செய்துள்ளாா். தற்போது பூக்கள் நிறைந்து காய் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அந்த தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காய்ந்த நிலையிலிருந்த புல் தரையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை கண்டறிந்த அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும் அங்கிருந்த முருங்கை மரங்கள் தீயில் எரிந்து கருகின. மேலும், மின் மோட்டாா், சொட்டு நீா் குழாய் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களும் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...