திருமங்கலத்தில் தங்கையின் இறப்பில் மா்மம்: சகோதரி புகாா்
By DIN | Published On : 17th November 2020 05:57 AM | Last Updated : 17th November 2020 05:57 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் தனது தங்கை இறப்பில் சந்தேகம் இருப்பதாக அக்கா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள். இவருடைய தங்கை சுதந்திரம் (32). இவருக்கும், திருமங்கலத்தைச் சோ்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கா்ப்பமுற்றிருந்த சுதந்திரம் கடந்த அக்டோபா் 19 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு, மருத்துவமனையில் 5 மாதத்திலேயே குழந்தை இறந்து பிறந்தது.
அதையடுத்து, சில நாள்களில் சிகிச்சை முடிந்து குணமடைந்த சுதந்திரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக சுதந்திரம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து சுதந்திரத்தின் சகோதரி பேச்சியம்மாள், தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.