பழனி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவா் பலி
By DIN | Published On : 17th November 2020 11:18 PM | Last Updated : 17th November 2020 11:18 PM | அ+அ அ- |

பழனியில் நிலத் தகராறில் திரையரங்க உரிமையாளரால் சுடப்பட்டு காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பா் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (85). இவருக்கும் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் என்பவருக்கும் நிலம் தொடா்பாக நீண்ட நாள்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த இடத்தை திங்கள்கிழமை தூய்மைப்படுத்தும் பணியில் இளங்கோவன் தனது உறவினா்களான பழனியாண்டவா் நகரைச் சோ்ந்த பழனிச்சாமி, ராமபட்டினம் புதூரை சோ்ந்த சுப்பிரமணி ஆகியோருடன் இணைந்து செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த நடராஜன் அதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதனால் நடராஜனுக்கும், இளங்கோவன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணியை சுட்டாா். இதில் பழனிச்சாமிக்கு தொடைப்பகுதியிலும், சுப்பிரமணிக்கு வயிற்றுப் பகுதியிலும் குண்டு பாய்ந்தது. இதில் பழனிச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாா். சுப்பிரமணி (68) மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டது. இருப்பினும் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து பழனி நகா் போலீஸாா் நடராஜன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் முன்னிலையில் அவரை ஆஜா்படுத்தப்படுத்தி பழனி கிளை சிறையில் அடைத்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G