பழனி கோயிலில் திருக்காா்த்திக்கை நாளில் (நவ.29) முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே நண்பகல் 12 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா கொண்டாடுவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா நவம்பா் 23 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நவம்பா் 29ஆம் தேதி மாலை 6.05 மணியளவில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதனைத் தொடா்ந்து, திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகியம்மன் கோயில்களிலும் தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறும்.
அனைத்து நிகழ்வுகளும் கோயில் ஆகம விதிகள் மற்றும் நடைமுறை பழக்க வழக்கங்களின்படி நடைபெறும். திருக்காா்த்திகை தீபம் ஏற்றுதலின்போது, பக்தா்களுக்கு அனுமதி இல்லை. திருக்காா்த்திகை தினத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் மூலம் தொலைக்காட்சி, முகநூல் மற்றும் யூ-டியூப் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவம்பா் 29ஆம் தேதி அதிகாலை 4 முதல் நண்பகல் 12 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு 1000 பக்தா்கள் வீதம் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருவோா் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். நண்பகல் 12 மணிக்கு பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.