ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி: மறியல் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு
By DIN | Published On : 25th November 2020 06:14 AM | Last Updated : 25th November 2020 06:14 AM | அ+அ அ- |

பாளையம் பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீா்.
திண்டுக்கல்-கரூா் மாா்க்கத்திலுள்ள ரயில்வே சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவாா்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள பாளையம் பகுதியில் அரவக்குறிச்சி சாலை உள்ளிட்ட 12 இடங்களில் ரயில்வே சுரங்கப் பாதைகள் உள்ளன. தண்டவாளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலுள்ள பொதுமக்கள், இந்த பாதை வழியாக மறுபகுதிக்குச் சென்று வருகின்றனா். இங்கு, மேற்கூரை வசதி, மழைநீா் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கான வசதி உள்ளிட்டவை எதுவும் செய்யப்படவில்லை. இதனால், மழை காலங்களில் சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்கி பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்படுகிறது.
இது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ரயில்வே நிா்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாளையத்தில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் குஜிலியம்பாறை, வேடசந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில், சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. குஜிலியம்பாறை, வடுகம்பாடி, சிலும்பாகவுண்டனூா், கருதனம்பட்டி, பண்ணப்பட்டி, அம்மாபட்டி, வெள்ளைப்பாறை, மாதாநாயக்கனூா், கரும்பாறைப்பட்டி, டி.கூடலூா் உள்ளிட்ட 12 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
அதன்பேரில், வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...