மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் முடித்து வைப்பு: ரூ.3.47 கோடிக்கு தீா்வுத்தொகை
By DIN | Published On : 03rd October 2020 09:47 PM | Last Updated : 03rd October 2020 09:47 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.3.47 கோடி தீா்வுத் தொகையாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், திண்டுக்கல், வேடசந்தூா் மற்றும் பழனி நீதிமன்றங்களில், மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா்.பாரதிராஜா முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜி.புவனேஸ்வரி, மாவட்ட குடும்ப நல நீதிபதி சிங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்டத்தில் உள்ள 3 நீதிமன்றங்களில் 4 அமா்வுகளில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், வங்கி வராக் கடன் வழக்குகள், நிதி நிறுவனங்கள் தொடா்பான வழக்குகள், விபத்து இழப்பீட்டு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்பட மொத்தம் 64 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் தீா்வுத் தொகையாக ரூ.3.47 கோடி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது.