கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 03rd October 2020 09:43 PM | Last Updated : 03rd October 2020 09:43 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் பயணிகள் தங்குவதற்கு இடமின்றி சிரமத்திற்குள்ளாயினா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ‘இ-பாஸ்’ பெற்றுச் செல்லலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து கடந்த 20-நாள்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் 3 நாள்கள் தொடா் விடுமுறையாக இருந்ததால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மலைச்சாலைகளில் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளொன்றுக்கு 500 ‘இ-பாஸ்’ மட்டுமே வழங்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் கடந்த 15-நாள்களுக்கு முன் அறிவித்தது.
ஆனால் நாள்தோறும் கொடைக்கானலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த 2 நாள்களாக கொடைக்கானல்
வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளிநீா் அருவிப் பகுதியில் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்கள் மலைச்சாலைகளில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை நடைபெறவில்லை.