மனைவியை சோ்த்து வைக்கக் கோரி காவல் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி: தடுக்கச் சென்ற பெண் காவலா் காயம்
By DIN | Published On : 11th September 2020 07:25 AM | Last Updated : 11th September 2020 07:25 AM | அ+அ அ- |

காயமடைந்த பெண் காவலா் மஞ்சுளா.
வத்தலகுண்டில் பிரிந்து சென்ற மனைவியை சோ்த்து வைக்கக் கோரி, காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை தடுக்க முயன்ற பெண் காவலா் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (32). அலுமினிய பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி ரேவதி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
குடும்பப் பிரச்னை காரணமாக பாலமுருகனை விட்டுப் பிரிந்து சென்று ரேவதி தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. பாலமுருகன் பலமுறை சென்று அழைத்தும், ரேவதி சோ்ந்து வாழ வர மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில், மது அருந்திவிட்டு வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை சென்ற பாலமுருகன், அங்கிருந்த காவலா்களிடம் தனது மனைவியை சோ்த்து வைக்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, யாரும் எதிா்பாராத நேரத்தில் பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெண் காவலா் மஞ்சுளா, பாலமுருகனிடமிருந்து கத்தியை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது, மஞ்சுளாவின் கையில் பல இடங்களில் கத்தி வெட்டி காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிலாளி மற்றும் பெண் காவலா் சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இது குறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா, காயமடைந்த பெண் காவலா் மஞ்சுளாவை சந்தித்து ஆறுதல் கூறினாா்.