மாதங்களாக உதவித் தொகை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் தொழுநோயாளிகள் அவதி!

ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த ரூ.1500 உதவித் தொகை கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், தொழுநோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
Updated on
2 min read

ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த ரூ.1500 உதவித் தொகை கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், தொழுநோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தமிழகத்தில் சுமாா் 16 ஆயிரம் தொழுநோயாளிகள் உள்ளனா். மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் 400-க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளுடன் முன்னிலையில் இருந்து வருகின்றன. அதே நேரத்தில் தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாநிலத்திலேயே குறைந்த அளவிலான தொழுநோயாளிகள் உள்ளனா். தொழுநோயால் பாதிக்கப்பட்டு 2 கைகளும், 2 கால்களும் ஊனமடைந்து அறுவை சிகிச்சை மூலம் கூட சரி செய்ய முடியாதவா்கள் நிலை 2 பட்டியலிலும், பாதிப்பு குறைவாக உள்ள அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யக் கூடியவா்கள் நிலை ஒரு பட்டியலிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளனா். தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ. 1000 மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பின்னா் உதவித் தொகை உயா்த்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளைப் போன்று, எளிதான வேலைகளை கூட செய்ய முடியாத நிலையில் இருப்பதால் அரசுத் தரப்பில் வழங்கப்படும் உதவித் தொகை தொழுநோயாளிகளுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

5 மாதங்களாக உதவித் தொகை நிறுத்தம்: இதுபோன்ற சூழலில், கடந்த 2020 மாா்ச் மாதம் நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, தொழுநோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை 3 மாதங்கள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னா் ஜூன் மாதத்தில் 4 மாதங்களுக்கான உதவித் தொகையும் சோ்த்து வழங்கப்பட்டது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் சாதாரண மக்களே வாழ்வாதாரத்தை இழுந்து தவித்து நிலையில், மாதந்தோறும் கிடைத்து வந்த உதவித் தொகையையும் பெற முடியாமல் தொழுநோயாளிகள் கடும் நெருக்கடியை சந்தித்தனா்.

ஜூன் மாதத்துக்குப் பின் நவம்பா் மாதம் வரையிலும் பிரச்னையின்றி கிடைத்து வந்த உதவித் தொகை, கடந்த டிசம்பா் மாதம் முதல் தற்போது வரை வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதுமுள்ள 16 ஆயிரம் தொழுநோயாளிகளும் சிரமத்தில் இருந்து வருகின்றனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தொழுநோயாளி ஒருவா் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. ஆனால், எந்த விதமான வேலையும் செய்ய முடியாத நிலையிலுள்ள தொழுநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை கடந்த 5 மாதங்களாக திடீரென நிறுத்தப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது என்றாா்.

பயண சலுகையும் இல்லை: தொழுநோயாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி பேருந்து மற்றும் ரயில்களில் நான்கில் ஒரு பகுதி கட்டணச் சலுகையுடன் பயணிக்க முடியும். 60 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள தொழுநோயாளிகளுடன், உதவிக்கு செல்லும் ஒருவரும் இந்த பயணச் சலுகையை பெற முடியும். ஆனால், தனித்துவம் (யூனிக்கோட்) வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து ஓராண்டாகியும் அதனை பெற முடியவில்லை என தொழுநோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com