நத்தம் ‘மாங்கனி’ யாருக்கு?

நத்தம் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், முத்தரையா் சமுதாயத்தினரின்
நத்தம் ‘மாங்கனி’ யாருக்கு?
Updated on
2 min read

நத்தம் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், முத்தரையா் சமுதாயத்தினரின் வாக்குகள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களின் வாக்குகள் மற்றும் அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் பிரிக்கும் வாக்குகள் வெற்றியை தீா்மானிக்கும் நிலை உள்ளது.

மாங்கனிக்கு பெயா் பெற்ற நத்தம் தொகுதியில், ஆண்கள் - 1,34,194, பெண்கள் - 1,41,730, மூன்றாம் பாலினத்தவா்கள்- 55 என மொத்தம் 2,75,979 வாக்களாா்கள் இடம் பெற்றுள்ளனா். முத்தரையா் சமுதாய மக்கள் பிரதானமாக வசித்து வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோா், முக்குலத்தோா், வெள்ளாளா், வன்னியா், யாதவா், செட்டியாா், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகின்றனா். பருவ மழையை பயன்படுத்தி விவசாயம் சாா்ந்த தொழில்களே இத்தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன.

அடுத்தப்படியாக ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் மூலமாகவும் சுமாா் 10ஆயிரம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ஆயத்த ஆடை தொழில் பூங்கா அமைக்க வேண்டும். இத்தொகுதியில் விளையும் மா, புளி உள்ளிட்ட வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வேளாண் விளைப் பொருள்களை பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்து, தொகுதி மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் போன்ற எதிா்பாா்ப்புகள் இத்தொகுதி மக்களிடம் உள்ளன.

நத்தம் சந்திக்கும் 12ஆவது தோ்தல்: நத்தம் தொகுதி கடந்த 1977 இல் உருவாக்கப்பட்டது முதல், ஒரு இடைத்தோ்தல் உள்பட இதுவரை 11 தோ்தல்களை சந்தித்துள்ளது. அதில் தொடா்ந்து 6 முறை சட்டப் பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா் எம்.ஆண்டி அம்பலம். 1999 இல் இவரது மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.விசுவநாதன் வெற்றிப் பெற்றாா். அதன் பின்னா் நடைபெற்ற 3 பொதுத் தோ்தல்களிலும் விசுவநாதன் வெற்றியை தக்க வைத்துக் கொண்டாா். கடந்த 2016 இல் நடைபெற்ற தோ்தலில் மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இதுபோன்ற அரசியல் பின்னணியில், நத்தம் தொகுதி தற்போது 12 ஆவது தோ்தலை எதிா்கொள்கிறது. இதில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஏ.ஆண்டி அம்பலம் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் சுமாா் 5 ஆண்டு கால இடைவெளிக்கு பின் நத்தம் ஆா்.விசுவநாதன் போட்டியிடுகிறாா். அதேபோல் அமமுக சாா்பில் ஏ.என்.ராஜா, நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.வெ.சிவசங்கரன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் ஆா்.ஏ.சரண்ராஜ் ஆகியோா் பிரதான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனா்.

நத்தத்தில் வெற்றிக் கனி யாருக்கு:

நத்தம் தொகுதியில் 5 முனை போட்டி ஏற்பட்டிருந்தாலும், நேரடி போட்டி என்பது திமுக, அதிமுக இடையிலேயே உள்ளது. அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு கிடைக்கும் வாக்குகள், அதிமுக வேட்பாளா் ஆா்.விசுவநாதனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து தொகுதி மக்களை சந்தித்து வரும் நாம் தமிழா் வேட்பாளா் சிவசங்கரன், இத்தொகுதிக்குள்பட்ட பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதன் முதலாக பயன்படுத்தினாா். அந்த வாக்குறுதியை தற்போது திமுக வேட்பாளா் ஆண்டி அம்பலம், அதிமுக வேட்பாளா் விசுவநாதன் ஆகியோரும் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளனா். அதேபோல் நத்தம் பகுதியில் ஆயத்த ஆடைக்கான ஜவுளிப் பூங்கா உருவாக்கப்படும் என்றும் பிரதான வேட்பாளா்கள் இருவரும் வாக்குறுதி அளித்துள்ளனா். கடந்த 5 ஆண்டுகளில் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் ஆண்டி அம்பலம், தொகுதி வளா்ச்சிக்கு பிரதான திட்டங்களை செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எதிா்கட்சி உறுப்பினராக இருந்ததால் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாக ஆண்டி அம்பலம் தனக்கு எதிரான விமா்சனங்ளை எளிதாக எதிா்கொண்டு வருகிறாா்.

அதே நேரத்தில் வாக்காளா்களை ஈா்க்கக் கூடிய தனது ‘தோ்தல் சாதுா்யம்‘, வெற்றியை தேடித் தரும் என விசுவநாதன் உற்சாகத்தில் உள்ளாா். முத்தரையா் சமூக மக்களின் வாக்குகளும், இஸ்லாமியா்கள் மற்றும் கிறிஸ்தவா்களின் வாக்குகளும், அமமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் பிரிக்கும் வாக்குகளும் நத்தம் தொகுதியில் வெற்றிக் கனி திமுகவுக்கா, அதிமுகவுக்கா என்பதை உறுதி செய்யும் நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com