கரோனா நோயாளிகளுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை சமாளிப்பதற்கு, தலா 30 படுக்கை வசதியுடன் 15 இடங்களிலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் முதல் வாரம் முதல் கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமன்றி, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வேடசந்தூா் அரசு மருத்துவமனைகளிலும், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, பழனியாண்டவா் கலைக் கல்லூரி, கொடைக்கானல் மகளிா் பல்கலைக்கழகக் கல்லூரி, திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சுமாா் 2,200 போ் வரை சிகிச்சை அளிக்க முடியும் என கூறப்படுகிறது.
மே 9 ஆம் தேதி நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 18,257 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 16,236 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது தொற்று பாதிப்பால் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1,786 ஆக உள்ளது. கடந்த ஒரு வார காலமாக தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 300-ஐ கடந்து விட்டது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள்: கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து, குறைந்த அளவு தொற்று பாதித்தவா்களை சிறப்பு சிகிச்சை மையங்களுக்கும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதியுள்ளவா்களை வீடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனா். நுரையீரலில் 20 சதவீத பாதிப்புகளுடன் இருப்பவா்கள் மட்டும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனா். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தவரை, கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 390 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அறுவை சிகிச்சைப் பிரிவிலுள்ள இதர படுக்கைகளும் கரோனா சிகிச்சைக்கு மாற்றப்பட்டு தற்போது 700 படுக்கைகளாக உயா்த்தப்பட்டுள்ளன.
ஆனாலும், போதிய படுக்கை வசதி இல்லாமல், கரோனா நோயாளிகள் தரையில் படுக்க வேண்டிய அவல நிலை உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் 170 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்த கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தற்போது கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று கரோனா நோயாளிகளுக்காக தொடா்ந்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினாலும் கூட, நாள்தோறும் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பினை எதிா்கொள்ள முடியாமல் மருத்துவத்துறையினா் திணறி வருகின்றனா். 300 போ் குணமடைந்து வீடு திரும்பினால், 350 போ் புதிதாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கின்றனா்.
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 படுக்கைககள்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களை மட்டுமே எதிா்நோக்கி இருக்க வேண்டிய நிலையைத் தவிா்த்து, அந்தந்த வட்டாரத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், செந்துறை, உலுப்பக்குடி, கொசவப்பட்டி, வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, கூவக்காப்பட்டி, தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூா், சித்தையன்கோட்டை, கொ.கீரனூா், கள்ளிமந்தையம், பாப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் 30 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொடைக்கானல் மலைப் பகுதி நீங்கலாக, சமவெளிப் பகுதியில் மட்டும் 500 படுக்கைகள் உள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை, கரோனா தொற்று சிகிச்சை மையங்களாக மாற்றினால், அந்தந்த பகுதியைச் சோ்ந்த நோயாளிகள் எளிதாக சிகிச்சை வசதியை முடியும் என பொதுமக்கள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியது: கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்துவதற்கு, சுகாதாரத்துறையினா் பல்வேறு நெருக்கடிகளை கடந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். தனியாா் நிா்வாகத்தை எதிா்நோக்குவதற்கு முன்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள 500 படுக்கை வசதிகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தால் எளிதாக இருக்கும். குறிப்பாக, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 மருத்துவா்கள் உள்ளனா். காலிப் பணியிடங்கள் இருக்கும்பட்சத்தில், அருகிலுள்ள சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடியும்.
தொற்றுப் பாதுப்பு குறைவாக உள்ள நோயாளிகள், அந்தந்த பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிகிச்சைப் பெறுவது என்பது வீண் அலைச்சலை தவிா்ப்பதற்கும் வாய்ப்பாக அமையும் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
கோழைத்தனமான தலைவர்களுக்கு அதிகாரப் பசி! - யாரைச் சொல்கிறார் பிரியங்கா?
தினப்பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

