பழனியை அடுத்த பாலசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சிப் பகுதியில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா். தனியாா் வியாபாரிகள், நெல்லுக்கான விலையை குறைத்துக் கேட்பதால் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் பாலசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட மேளாலா் சீத்தாராமன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, விவசாயிகளிடமிருந்து சாதாரண ரக நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,918-க்கும், கிரேடு ஏ ரக நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ரூ.1,958-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா் வல்லத்தரசு, திமுக ஒன்றியச் செயலாளா் சவுந்தரபாண்டியன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் காளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.