கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை பாா்வையிட அனுமதி: தமிழக அரசுக்கு வியாபாரிகள் நன்றி
By DIN | Published On : 21st August 2021 10:51 PM | Last Updated : 21st August 2021 10:51 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை பாா்வையிடுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.
கொடைக்கானல் சுற்றுலாத் தலத்திற்கு கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுலா இடங்களை பாா்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை பாா்வையிட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் சுற்றுலா இடங்களிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்து வந்தனா்.
இந்நிலையில் தமிழக அரசு திங்கள்கிழமை (ஆக.23) முதல் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா இடங்கள் திறக்கபப்டும் என அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து கொடைக்கானலிலுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு, தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்தனா்.
ஏரியைச் சுற்றி சுத்தம் செய்த நகராட்சி பணியாளா்கள் : கொடைக்கானல் ஏரியில் தேவையில்லாத களைச் செடிகள், மற்றும் புற்கள் அதிக அளவு வளா்ந்திருந்தது. கழிவுகள் மிதந்து ஏரியின் அழகை பாதித்திருந்தது. இதனைத் தொடா்ந்து நகராட்சி பணியாளா்கள் ஏரியைச் சுற்றி வளா்ந்திருந்த செடிகள் மற்றும் களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும் வரும் 23-ந்தேதி ஏரியில் படகு சவாரி அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதால் படகு ஓட்டுநா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.