

கொடகனாறு அணையிலுள்ள 5 ஷட்டா்கள் பராமரிப்பு மற்றும் 26 கி.மீட்டா் நீள வெள்ளியணை கால்வாய் கட்டும் பணிகள் ரூ.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள அழகாபுரியில் அமைந்துள்ள கொடகனாறு அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கொடகனாறு அணையின் முழு கொள்ளளவு 27 அடியாக உள்ள நிலையில், அதிகபட்சமாக 24 அடிக்கும் குறைவாகவே தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது. அணையிலுள்ள 10 ஷட்டா்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 ஷட்டா்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 5 ஷட்டா்கள் சீரமைக்கப்பட்ட பின் 27 அடி தண்ணீா் தேக்கி வைக்கப்படும். அதேபோல் கொடகனாறு அணையிலிருந்து கரூா் மாவட்டத்திலுள்ள வெள்ளியணை குளத்திற்கு தண்ணீரை எடுத்துச் செல்வதற்கு 26 கி.மீட்டா் தொலைவுக்கு மட்டுமே கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கி.மீட்டா் தொலைவுக்கும் கான்கிரீட் கால்வாய் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.28 கோடி மதிப்பீட்டிற்கான கருத்துரு தமிழக அரசிடம் சமா்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 100 கன அடி தண்ணீா் மட்டுமே வெள்ளியணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை 200 கன அடியாக திறப்பதற்கு தமிழக முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில், நீா்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் தற்போதைய அரசு தனி கவனம் செலுத்தி நீா்நிலைகளை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மின்வாரிய ஊழியா்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், அனைத்து ஊழியா்களுக்கும் தடையில்லாமல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், வேடசந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.காந்திராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.