பணிநிரந்தரம் செய்யக் கோரி தற்காலிக மருத்துவப் பணியாளா்கள் தா்னா
By DIN | Published On : 31st December 2021 08:30 AM | Last Updated : 31st December 2021 08:30 AM | அ+அ அ- |

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்காலிகப் பணியாளா்கள்.
பணிநிரந்தரம் செய்யக் கோரி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்காலிகப் பணியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்றுப் பரவல் கடந்த மே மாதம் அதிகரித்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாதங்களுக்கு மருத்துவமனை பணியாளா்கள், காவலா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். அந்தப் பணியாளா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது. இதனிடையே 200 பணியாளா்களுக்கான பணிக் காலம் 2021 டிசம்பவா் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊதியம் வழங்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் மனு அளிப்பதற்காக தற்காலிக பணியாளா்கள் சுமாா் 25 போ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்தனா். பின்னா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது பெண் ஊழியா் ஒருவா் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.