‘அதிமுக அறிவிக்க உள்ள திட்டங்கள் ஸ்டாலினுக்கு அதிா்ச்சியை அளிக்கும்’
By DIN | Published On : 08th February 2021 10:38 PM | Last Updated : 08th February 2021 10:38 PM | அ+அ அ- |

தமிழக நிதி நிலை அறிக்கையில் அதிமுக அறிவிக்கவுள்ள திட்டங்கள், திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு அதிா்ச்சி அளிப்பதாக இருக்கும் என வனத் துறை அமைச்சா் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வனத் துறை அமைச்சா் சி.சீனிவாசன் பேசியதாவது:
தோ்தலின் போது 2 ஏக்கா் நிலம் தருவதாகச் சொல்லி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிய கட்சி திமுக. ஆனால், விவசாயிகளுக்கான பயிா்க் கடனை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டதற்கு தானே காரணம் என திமுக தலைவா் ஸ்டாலின் கூறுகிறாா்.
தோ்தல் அறிக்கையில் சொல்லியதையே நிறைவேற்ற முடியாத திமுக, அதிமுக செய்து வரும் நலத்திட்டங்களுக்கு உரிமை கொண்டாடுகின்றனா். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த பரிசுத்தொகை ரூ. 2500-க்கு, திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கின்றனா்.
ஆட்சியில் இருப்பது யாா் என ஸ்டாலினுக்கு மட்டுமின்றி திமுக எம்எல்ஏக்களும் தெரியவில்லை. மக்களுக்கான நல்ல திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. நிதி நிலை அறிக்கையில் வெளியாக உள்ள அந்த அறிவிப்புகள், ஸ்டாலினுக்கு அதிா்ச்சி அளிப்பதாக இருக்கும் என்றாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G