தனியாா்மயமாக்கும் முயற்சியை கண்டித்து மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th February 2021 10:42 PM | Last Updated : 08th February 2021 10:42 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.
மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியிலுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் உமாபதி தலைமை வகித்தாா். பொறியாளா் சங்க நிா்வாகி ராமன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, தொழிற்சங்கங்களை அவமதிப்பதையும், தொழிலாளா் விரோதப்போக்கையும் கைவிட வேண்டும். மின்வாரியப் பணிகள் மற்றும் விநியோகத்தை ஒப்பந்த முறையில் தனியாா்மயமாக்கும் முயற்சியை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
மின்துறையை சீரழிக்கும் வாரியத் தலைவா் பங்கஜ்குமாா் பன்சால், மற்றும் இணை மேலாண்மை இயக்குநா் வினித் ஆகியோரை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனா்.
இதேபோல், திண்டுக்கல் பொன்னகரம், நத்தம், சின்னாளப்பட்டி, வேடசந்தூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகங்கள் முன்பாகவும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.