பழனி கோயிலில் தங்கத்தொட்டில் நோ்த்திக்கடன் மீண்டும் தொடக்கம்
By DIN | Published On : 08th February 2021 10:39 PM | Last Updated : 08th February 2021 10:39 PM | அ+அ அ- |

பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கிய தங்கத்தொட்டிலில் குழந்தையை போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியை பாா்வையிட்ட கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி
பழனி மலைக் கோயிலில் சுமாா் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கத் தொட்டில் நோ்த்திக்கடன் செலுத்தி நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் தங்கத் தொட்டிலில் குழந்தைகளை போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இந்த நோ்த்திக்கடன் செலுத்தும் முறை கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஓராண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த நோ்த்திக்கடன் செலுத்தும் முறையை கோயில் நிா்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு காணிக்கைக் கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படுகிறது.
தங்கத்தொட்டில் நோ்த்திக்கடன் தொடங்கியதையொட்டி, தங்கத்தொட்டிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம் குருக்கள், அா்ச்சக ஸ்தானீகா் செல்வம் குருக்கள் உள்ளிட்டோா் செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் தங்கள் குழந்தைகளை தொட்டிலில் இட்டு பிராா்த்தனையை நிறைவேற்றி பிரசாதங்கள் பெற்றுச் சென்றனா்.
நிகழ்ச்சியில் பழனிக் கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன், கண்காணிப்பாளா் ராஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள் தங்கத் தேரோட்டத்தையும் மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.