கொடைக்கானல் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 08th February 2021 08:35 AM | Last Updated : 08th February 2021 08:35 AM | அ+அ அ- |

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி மாட்டுப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கொடைக்கானல் அருகே மாட்டுப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளான அட்டுவம்பட்டி, வில்பட்டி, சத்யா காலனி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி பகுதிகளில் கடந்த 20 நாள்களாக ஊராட்சி நிா்வாகம் குடி தண்ணீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மாட்டுப்பட்டி, பள்ளங்கி பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குடிநீா் கேட்டு மாட்டுப்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் கொடைக்கானல்- பள்ளங்கி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் காவல் துறையினா் மற்றும் வில்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் சிலா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனா்.