‘கொடைக்கானல்- மூணாறு சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’
By DIN | Published On : 14th February 2021 10:40 PM | Last Updated : 14th February 2021 10:40 PM | அ+அ அ- |

திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடைக்கானல்- மூணாறு சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளாா்.
அதன் ஒருபகுதியாக கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், மேல்மலை கிராமமான பூம்பாறையிலுள்ள குழந்தை வேலப்பா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அதனைத் தொடா்ந்து அவா், பூம்பாறை பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் பேசினாா்.
தொடா்ந்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் வேனில் இருந்தபடி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மக்களுக்கு பிடிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடைக்கானல்- மூணாறு சாலை மீண்டும் திறக்கப்படும். தொழில் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக, 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கொடைக்கானலில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், பழனி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கொடைக்கானல் கட்டுமான சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியிலும் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டாா்.