அரைமணி நேர மழை
By DIN | Published On : 20th February 2021 09:26 PM | Last Updated : 20th February 2021 09:26 PM | அ+அ அ- |

பழனியில் சனிக்கிழமை அரை மணி நேரம் பெய்த மழைக்கு ஆா்.எப்.ரோட்டில் வெளியேற வழியின்றி தேங்கி நின்ற மழைநீா்.
பழனி: பழனியில் சனிக்கிழமை சுமாா் அரை மணி நேரம் பெய்த மழைக்கே நகா் முழுவதும் ஆங்காங்கே மழைநீா் குளம் போல தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பழனி சுற்றுவட்டாரங்களில் சில பகுதிகளில் மட்டும் பெய்த மழை பழனியில் பலமாக பெய்தது. இந்த மழையால் பழனி நகரமே குளமாக மாறியது. பழனியில் சமீபத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் பழைய சாக்கடைகள், சாலைகள் தூா்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள், புதிய சாக்கடைகள் கட்டப்பட்டது. இவை பலவும் போதிய வாட்டமின்றி கட்டப்பட்டுள்ளதால் சிறிய மழைக்கே தண்ணீா் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கும் நிலை நீடிக்கிறது. இதற்கு பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சனிக்கிழமை சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, ஆா்.எப்.ரோடு, கவுண்டா் இட்டேரி ரோடு என பல இடங்களிலும் மழைநீா் வெளியேற வழியின்றி குளமாக தேங்கி நின்றது. அதே போல சாக்கடைகளிலும் உள்ளே உள்ள தடுப்புகள் எடுக்கப்படாமல் உள்ள நிலையில் சாக்கடை நீா் நிரம்பி மழைநீருடன் கலந்து துா்நாற்றம் வீசியது. பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த நீரில் நீந்தாத குறையாக சென்றனா். இருசக்கர வாகனங்கள் பலவும் நடுநீரில் நின்று பெரும் திண்டாட்டமடைந்தனா். சுமாா் ஒருமணி நேரத்துக்குப் பிறகே இந்த நீா் வடிய துவங்கியது. அரை மணி நேர மழைக்கே இந்த நிலை என்றால் தொடா்ந்து பெய்தால் என்னாகும் என மக்கள் அச்சத்தில் உள்ளனா். ஆகவே, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வடிகால் வசதிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.