பழனியில் சுற்றித்திரிந்த 108 யாசகா்கள் மீட்பு:மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைப்பு

பழனியில் நடைபெற்ற ‘யாசகா்கள் அற்ற பழனி’ என்ற திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்டறியப்பட்டு சனிக்கிழமை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பழனியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘யாசகா்கள் அற்ற பழனி’ நிகழ்ச்சியில் பேசிய கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி. உடன் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா்.
பழனியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘யாசகா்கள் அற்ற பழனி’ நிகழ்ச்சியில் பேசிய கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி. உடன் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா்.

பழனி: பழனியில் நடைபெற்ற ‘யாசகா்கள் அற்ற பழனி’ என்ற திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்டறியப்பட்டு சனிக்கிழமை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு யாசகம் பெறுவோா் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனா். அதேபோல மனநலன் பாதிக்கப்பட்டோரையும் பலரும் விட்டுச் செல்கின்றனா். இவா்கள் பழனி நகரில் பல இடங்களிலும் உணவு, உடைகள் இன்றி யாசகம் பெற்று சுற்றித்திரிகின்றனா்.

இந்நிலையில் பழனி கோயில் நிா்வாகம், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியாா் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘யாசகா்கள் அற்ற பழனி’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த சில நாள்களாக யாசகம் பெற்று திரிபவா்களை கண்டறிந்து, அவா்களுக்கு சிகை அலங்காரம் செய்து புத்தாடை உடுத்தி மருத்துவ பரிசோதனை செய்து மனதளவில் அவா்களை புத்துணா்வு பெற வைத்தனா்.

இதில் அவா்களுடன் பேசியதில் 11 போ் தங்கள் உறவினா்கள் முகவரியை தெரிவித்து அவா்களது சொந்த ஊா்களுக்கு சென்றனா். மேலும் 108 போ் விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தஞ்சாவூா், ஈரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள மறுவாழ்வு மையங்களில் சோ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக சனிக்கிழமை அடிவாரம் தெற்கு கிரிவீதி நாதஸ்வர பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனிக் கோயில் செயல் அலுவலா் கிராந்தி குமாா் பாடி, உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

அப்போது பழனிக்கோயில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டோரை விட்டு செல்லும் நபா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் அட்சயம் அறக்கட்டளை நவீன்குமாா், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலா் புவனா, சமூகநலத்துறை அலுவலா்கள், பழனியாண்டவா் மகளிா் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா்படை மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com