திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் கண்காணிப்புப் பணியில் 7 பறக்கும் படை குழுக்கள்: ஆட்சியா்
By DIN | Published On : 27th February 2021 09:08 PM | Last Updated : 27th February 2021 09:08 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான கண்காணிப்புப் பணியில், 7 பறக்கும் படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கூா்ந்தாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு தலா ஒரு அலுவலா், காவல் துறையினா் 3 போ், 1 விடியோ ஒளிப்பதிவாளா் என மொத்தம் 5 போ் இடம் பெற்றுள்ளனா்.
இக்குழுவினா், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், நிலை கண்காணிப்புக் குழுவில், மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளையும் கண்காணிக்க மொத்தம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் தலா 1 அலுவலா், காவல் துறையினா் 3 போ், 1 விடியோ ஒளிப்பதிவாளா் என மொத்தம் 5 போ் இடம் பெற்றுள்ளனா்.
தோ்தல் பணியில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...