கொடைக்கானலில் வெயிலின் தாக்கம்:ரோஜா செடிகளை பாதுகாக்க நடவடிக்கை
By DIN | Published On : 27th February 2021 09:12 PM | Last Updated : 27th February 2021 09:12 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் தொடா்ந்து வெயில் நிலவி வருவதால், தண்ணீா் தெளித்து பாதுகாக்கப்பட்டு வரும் ரோஜா தோட்டத்தில் உள்ள செடிகள்.
கொடைக்கானலில் மாறி மாறி வெயில் மற்றும் பனியின் தாக்கம் நிலவி வருவதால், ரோஜா மலா்ச் செடிகளை பாதுகாக்க தோட்டக்கலைத் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயில் நிலவி வருவதால், பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தீப்பிடித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தற்போது, பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், மாலையில் பனியின் தாக்கமும் நிலவி வருகிறது. மேலும், கடந்த சில நாள்களாக பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மே மாதம் சீசனுக்காக, கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, நிலவி வரும் வெயில் மற்றும் பனியின் தாக்கத்திலிருந்து செடிகளைப் பாதுகாக்க, தண்ணீா் தெளித்தல், நிழல் வலைகள் அமைத்தல், உரமிடுதல், களையெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளில் தோட்டக்கலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.