தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா
By DIN | Published On : 30th January 2021 09:12 PM | Last Updated : 30th January 2021 09:12 PM | அ+அ அ- |

பழனி தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை தங்கமயில் வாகனத்தில் ரத வீதி உலா வந்த முத்துக்குமாரசுவாமி.
பழனி: பழனி தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை முத்துக்குமாரசுவாமி தம்பதி சமேதராக தங்கமயில் வாகனத்தில் ரதவீதி உலா எழுந்தருளினாா். நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.27 ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டமும், ஜன.28 ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை, ஒன்பதாம் நாள் விழாவாக வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினாா். பெரியநாயகியம்மன் கோயிலில் துறையூா் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி தம்பதி சமேதராக நான்கு இரதவீதிகளில் உலா வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்கப்பட்டு தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.