அரசு ஊழியா்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 12 ஆண்டுகளாகத் தொடரும் குளறுபடிகள்!

அரசு ஊழியா்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக குளறுபடிகள் தொடா்ந்து வருகிறது.
அரசு ஊழியா்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 12 ஆண்டுகளாக தொடரும் குளறுபடிகள்!
அரசு ஊழியா்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 12 ஆண்டுகளாக தொடரும் குளறுபடிகள்!

அரசு ஊழியா்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக குளறுபடிகள் தொடா்ந்து வரும் நிலையில், 3 ஆவது தரப்பு நிா்வாகத்திற்கான ஒப்பந்தத்தை பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனா். இத்திட்டத்தில் 3ஆவது நிா்வாகியாக தனியாா் நிறுவனம் உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் இத்திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3ஆவது முறையாக புதுப்பிக்கப்பட்டது.

2020 ஜூன் 30 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஓராண்டுக்கு தனியாா் நிறுவனத்திற்கே நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக அரசு ஊழியா்களிடம் மாதந்தோறும் தலா ரூ.180 காப்பீட்டுக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் சுமாா் 800-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவருக்கான கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம், அறை வாடகை, உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்படும் என அரசாணையில் (அரசாணை 202, 30.06.2016) குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25ஆயிரம், கருப்பை நீக்கத்திற்கு ரூ.45 ஆயிரம் என 2 அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய்களுக்கு ரூ.7.50 லட்சம் வரையிலும், இதர அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவினங்களுக்கு ரூ.4 லட்சம் வரையிலும் 4 ஆண்டுகளுக்குள் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என அந்த அரசாணையில் (202) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகப்பேறு அறுவை சிகிச்சை கூட இத்திட்டத்தின் கீழ் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும், டெங்கு உள்ளிட்ட குறிப்பிட்ட சில நோய் பாதிப்புகளும் இத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை.

12 ஆண்டுகளாக தொடரும் குழப்பம்: அரசு ஊழியரின் வயதான பெற்றோா், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாலும் கூட அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சை பெற முடியவில்லை. அறுவை சிகிச்சைக்கான கட்டண விவரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. மருத்துவ சிகிச்சைக்கான செலவின கட்டணத்தை அரசு ஊழியா்கள் முழுமையாக பெற முடியாத நிலையும் உள்ளது. திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நோய்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற்ற போதிலும், சம்மந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைகளிடம் கட்டணத்தை செலுத்திவிட்டு அந்தத் தொகையை மீளப் பெற முடியாமல் பல அரசு ஊழியா்கள் மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கின்றனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு, நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.9,500 மற்றும் மருந்து செலவு மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ.35ஆயிரம் வரை தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு குழப்பங்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக தீா்வு எட்டப்படாத நிலையில், 3 ஆவது தரப்பு நிா்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை முழுமையாக அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என அரசு ஊழியா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடரிக் எங்கல்ஸ் கூறியதாவது:

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பெறப்பட்ட சிகிச்சைக்கு முழுமையாக காப்பீட்டுத் தொகை கிடைக்காததால், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப கேட்டு நூற்றுக்கணக்கான வழக்குகள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, கூடுதல் தொகை செலுத்தியிருந்தால் அதைத் திரும்பப் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அதிகாரமளிப்பு குழுவிடம் முறையிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அதிகாரமளிப்பு குழுக் கூட்டம் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படுவதில்லை. இதனால் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைப் பெறும் அரசு ஊழியா்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கான 3 ஆவது தரப்பு நிா்வாகத்துடனான ஒப்பந்தம் ஜூன் 30ஆம் தேதியுடன் காலாவதியாவதால், அதை பொது காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து, விபத்து மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com