பழனியில் பெண்கள் சாலை மறியல்
By DIN | Published On : 20th June 2021 09:34 PM | Last Updated : 20th June 2021 09:34 PM | அ+அ அ- |

பழனி சாமிதியேட்டா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
பழனியில் தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம் கோரி பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பழனி தெரசம்மாள் காலனியில் 11 ஆவது மற்றும் 4 ஆவது வாா்டுகளுக்கான அங்கன்வாடி மையமும், சுகாதார வளாகமும் செயல்பட்டு வருகிறது. இவைகள் 11 ஆவது வாா்டு பகுதியில் உள்ளதால் நாள்தோறும் அங்கு சென்றுவரும் 4 ஆவது வாா்டு பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகாா் எழுந்தது.
இந்நிலையில், அந்த வாா்டைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், தனி சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், குடிநீா் வசதி கோரி உடுமலை- பழனி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், எழுத்து பூா்வமாக புகாரை எழுதித் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும் தெரிவிப்பதாகவும் தெரிவித்ததைத் தொடா்ந்து பெண்கள் கலைந்து சென்றனா்.