பழனியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
By DIN | Published On : 24th June 2021 06:40 AM | Last Updated : 24th June 2021 06:40 AM | அ+அ அ- |

பழனி மற்றும் சுற்றுவட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
பழனி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழனி நகா் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாள்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அதிகாலை முதலே அரசு மருத்துவமனை முன்பு வரிசையில் நின்றிருந்தோம். பலமணி நேரத்துக்குப் பிறகு தடுப்பூசி இல்லை என பணியாளா்கள் தெரிவிக்கின்றனா். முறையாக அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்படுவதில்லை. பல கி.மீ.தொலைவிலிருந்து வருபவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா் என்றனா்.