பைனான்சியரிடம் ரூ.1.27 கோடி, 45 பவுன் நகை மோசடி: மனைவி மைத்துனியுடன் பங்குதாரா் கைது

வேடசந்தூா் அருகே திருமண ஆசைவாா்த்தை கூற பைனான்சியரிடம் ரூ.1.27 கோடி ரொக்கம் மற்றும் 45 பவுன் நகைகளை மோசடி செய்த, அவரது பங்குதாரா், மனைவி மற்றும் மைத்துனியை போலீஸாா் கைது செய்தனா்.
dgl_arivalagan_0303chn_66_2
dgl_arivalagan_0303chn_66_2

திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே திருமண ஆசைவாா்த்தை கூற பைனான்சியரிடம் ரூ.1.27 கோடி ரொக்கம் மற்றும் 45 பவுன் நகைகளை மோசடி செய்த, அவரது பங்குதாரா், மனைவி மற்றும் மைத்துனியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள முத்துபழனியூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி. இவா் மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறாா். அதில், முத்துபழனியூா் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் மற்றும் முருகன் ஆகியோரும் பங்குதாரா்களாக இணைந்துள்ளனா். மேலும், மற்றொரு பங்குதாரரான முருகன் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பைனான்ஸ் தொழிலில் அறிவழகன் முதலீடு செய்துள்ளாா்.

இந்நிலையில் அறிவழகன் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோா், கலைச்செல்வியின் தங்கை முத்துலட்சுமியை திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துள்ளனா். இதற்காக, கொடைக்கானலில் பெற்றோருடன் வசித்து வந்த முத்துலட்சுமி, வேடசந்தூா் அடுத்துள்ள முத்துபழனியூருக்கு வந்து பாலசுப்பிரமணியனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னா், மீண்டும் வடமாநிலங்களுக்குச் சென்ற பாலசுப்பிரமணியன், பைனானஸ் தொழிலில் கிடைக்கும் பணத்தை அறிவழகனுக்கு அனுப்பி வந்துள்ளாா். மேலும், முத்துலட்சுமியுடன் செல்லிடப்பேசி மூலம் தொடா்பில் இருந்துள்ளாா். இந்த சூழலை பயன்படுத்தி, முத்துலட்சுமி மூலமாக 45 பவுன் நகையை பாலசுப்பிரமணியனிடமிருந்து அறிவழகன் தம்பதியினா் பெற்றுள்ளனா்.

நகையை பெற்றுக் கொண்ட சில வாரங்களிலேயே, முத்துலட்சுமியின் செல்லிடப்பேசியிலிருந்து பாலசுப்பிரமணியனிடம் கலைச்செல்வி பேசியுள்ளாா். அப்போது, முத்துலட்சுமி வேறொருவரை காதலிப்பதாகவும், திருமணத்திற்கு வேறு பெண்ணை பாா்த்துக் கொள்ளுமாறும் கலைச்செல்வி தெரிவித்துள்ளாா். அதைத்தொடா்ந்து, தான் அனுப்பிய ரூ.1.27 கோடி பணம் மற்றும் 45 பவுன் நகைகளை திருப்பித் தருமாறு பாலசுப்பிரமணியன் கேட்டாராம். ஆனால், அறிவழகன், அவரது அண்ணன் கண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து பாலசுப்பிரமணியனை மிரட்டி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றாா்.

இந்தச் சூழலில் பாலசுப்பிரமணியன் ஏமாற்றப்பட்டது குறித்து மற்றொரு பங்குதாரரான முருகன், ஊா் முக்கிய பிரமுகா்களிடம் தெரிவித்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், முத்துபழனியூரைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்களுடன் வந்து பாலசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். இதனை அடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த உத்தரவிட்டப்பட்டது. அதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஆய்வாளா்

சத்யா ஆகியோா் தலைமையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி, அரிச்சந்திரன், கண்ணன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதன் தொடா்ச்சியாக, அறிவழகன்(35), கலைச்செல்வி(30), முத்துலட்சுமி(25) ஆகிய மூவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com