பழனி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் படுக்கைகள் முழுவதும் நிரம்பியதையடுத்து நோயாளிகள் தரையிலும், வெளியிலும் படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பழனி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனா்.
அரசு மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், பலரும் தரையிலும், வெளியே படுக்கைகளைப் போட்டும் படுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் 163 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்க போதிய மருத்துவா்கள் இல்லை என்றும், மருந்துகள் பற்றாக்குறையால் போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து தலைமை மருத்துவா் உதயக்குமாா் கூறியது: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களுக்கு வேண்டிய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு உள்ளது என்றாா்.