சிறு நிதி நிறுவனங்கள் கெடுபிடியால் மன உளைச்சல்: மகளிா் குழுவினா் புகாா்
By DIN | Published On : 19th May 2021 11:17 PM | Last Updated : 19th May 2021 11:17 PM | அ+அ அ- |

பழனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ற மகளிா் குழுக்களின் தலைவிகள், அந்நிறுவனத்தினரின் கெடுபிடியால் மன உளைச்சலுக்கு ஆளாகிருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் கயிறு விற்பது, சூடம் விற்பது, பைகள், பொம்மைகள் விற்பது உள்ளிட்ட பல தொழில்களில் நேரடியாகவும், விபூதி தயாரித்தல் போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் செல்வது போன்ற மறைமுக வணிகங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோா் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனா். இவா்களில் பலரும் பெண்களே. இவா்கள் மகளிா் குழுக்களாக சோ்ந்து மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி வாரந்தோறும் தவணையாக செலுத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் சாலை, இடும்பன் இட்டேரி சாலை, பெரியப்பா நகா் என பல இடங்களிலும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் பல்வேறு பெயா்களில் இயங்கி வருகின்றன. மகளிா் குழுக்களுக்கு இந்த நிறுவனங்கள் வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளன. தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் கோயிலுக்கு பக்தா்கள் அனுமதி மறுக்கப்பட்டு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பலரும் அரசு வழங்கும் கரோனா நிதி மற்றும் நியாய விலைக் கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியை வைத்தே குடும்பத்தை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கடன் கொடுத்த நிறுவனங்கள் குழுக்களின் தலைமையேற்று நடத்தும் பெண்களின் வீட்டுக்குச் சென்று தவணைப் பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி வருவதால் அவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து மகளிா் குழுத்தலைவிகள் கூறியது: குழுவில் உள்ள உறுப்பினா்கள் கடனையும் சோ்த்து குழுத் தலைவரே தரவேண்டும் என நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது. கடன் பெற்றவா்கள் கடனை திரும்ப செலுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் தங்களுக்கு கடனை செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும். மேற்படி கூடுதல் காலத்துக்கு அதிக வட்டி கேட்கக் கூடாது. திண்டுக்கல் மாவட்டம் முழுமைக்குமே இதே பிரச்னை மகளிா் குழுக்களுக்கு உள்ளதால் மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு மைக்ரோ நிதி நிறுவனங்கள் கடனை வசூலிக்க கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.