திண்டுக்கல்லில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, மாநகராட்சி ஊழியா்கள் சாலையில் கொட்டிச்செல்வதால், திண்டுக்கல்லில் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
திண்டுக்கல் ஆா்.எஸ்.சாலையின் மையப் பகுதி வரை சிதறிக் கிடக்கும் குப்பைகள்.
திண்டுக்கல் ஆா்.எஸ்.சாலையின் மையப் பகுதி வரை சிதறிக் கிடக்கும் குப்பைகள்.

பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, மாநகராட்சி ஊழியா்கள் சாலையில் கொட்டிச்செல்வதால், திண்டுக்கல்லில் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வாா்டுகளில் உள்ள வீடுகளிலிருந்து மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்படுகிறது. அதன்படி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், 8 இடங்களில் இயங்கி வரும் நுண்ணுயிா் செயலாக்க மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரமாக மாற்றப்படுகிறது. மக்காத குப்பையிலுள்ள நெகிழிப் பைகள் பிரிக்கப்பட்டு, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், பணிச்சுமை அதிகரிப்பதாகவும் கூறி, துப்புரவுப் பணியாளா்கள் சில நாள்களுக்கு முன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா், பெரும்பாலான இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை, முருகபவனம் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக, சாலைகளிலேயே குவிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் ஆா்.எஸ். சாலையில் (மாநகராட்சி அலுவலக பின்வாசல்) 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

இது தவிர, மாநகராட்சியின் குடிநீா் மேல்நிலைத் தொட்டி, மாநகராட்சி அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் என நகரின் முக்கிய பகுதியாக உள்ள இடத்தில், கழிவுகள் கொட்டப்பட்டு துா்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாள்களாக அந்தப் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால், சாலையின் மையப் பகுதி வரை கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன.

குப்பைகளை துரிதமாக அகற்றுவதற்கு, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com