பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மாணவா்களின் பேருந்து பயணத்தால் கேள்விக்குறி
By DIN | Published On : 01st September 2021 11:29 PM | Last Updated : 01st September 2021 11:29 PM | அ+அ அ- |

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை முகக் கவசம் அணியாமல் பயணத்துக்குத் தயாராகும் மாணவா்கள்.
கூட்ட நெரிசலுக்கு இடையே மாணவா்கள் பேருந்துகளில் பயணிப்பதால், பள்ளிகளில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது பயனளிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவா்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில், வகுப்பறைக்கு 20 மாணவா்கள் வீதம் மட்டுமே அமர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இடப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்ட கரோனா தடுப்பு விதிமுறைகள், பள்ளிகளுக்கு வெளியே கேள்விக்குறியானது. குறிப்பாக திண்டுக்கல், நத்தம், எரியோடு, அய்யலூா், வடமதுரை, வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஊரகப் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேருந்துகளில் கூட்ட நெரிசலுக்கு இடையே பயணம் செய்த மாணவா்கள் மத்தியில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. மேலும், பெரும்பாலான மாணவா்கள் முகக் கவசம் கூட அணியவில்லை.
ஊரகப் பகுதிகளைப் பொருத்தவரை, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து சேவை உள்ளது மாணவா்களிடையே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளி செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.