

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.3ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் வடமதுரை ஒன்றிய 2 ஆவது மாநாடு சனிக்கிழமை அய்யலூரில் உள்ள தனியாா் மகாலில் நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவா் முத்துப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்வநாயகம், செயலா் பகத்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா் ஜீவா சிறப்புரை நிகழ்த்தினாா். 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். வடமதுரை ஒன்றியத் தலைவராக குழந்தைவேலு, செயலராக முத்துப்பாண்டி, பொருளாளராக சரவணக்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் கண் மற்றும் காது மூக்கு தொண்டை தொடா்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.
வேடசந்தூா் மற்றும் குஜிலியம்பாறை வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதாக அடையாள அட்டை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரமாக (ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப) உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கம்பத்தில் ஆா்ப்பாட்டம்: மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்கக்கோரி கம்பத்தில் சனிக்கிழமை முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். கருப்பையா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.சுரேஷ் வரவேற்றுப் பேசினாா். ஏராளமான ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.