முடிக்காணிக்கைக்கு கட்டணம் ரத்து - மாா்க்சிஸ்ட் சிகை கிளை வரவேற்பு
By DIN | Published On : 04th September 2021 10:28 PM | Last Updated : 04th September 2021 10:28 PM | அ+அ அ- |

பழனி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி தேவஸ்தான சிகை கிளை கட்சியின் கிளைமாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளா் சச்சிதானந்தம் தலைமை வகித்தாா்.
நகர செயலாளா் கந்தசாமி வரவேற்புரை வழங்கினாா். சிஐடியூ கன்வீனா் பிச்சைமுத்து, முருகேசன், நாட்ராயன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பழனி திருக்கோயிலில் முடிக்காணிக்கை வழங்கும் பக்தா்களிடம் கட்டணம் ஏதும் வழங்கப்படக் கூடாது என அறநிலையத்துறை அறிவித்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருக்கோயில் சிகைத் தொழிலாளா்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும், பழனியில் டோப்பா தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும், பழனி திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், காரமடையில் உள்ள திருக்கோயில் மருத்துவமனை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.