ஒட்டன்சத்திரத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 2,714 பேருக்கு பணி உறுதி ஆணைகள் வழங்கல்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 2,714 பேருக்கு பணி உறுதி ஆணைகளை அமைச்சா்கள் வழங்கினா்.
ஒட்டன்சத்திரத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 2,714 பேருக்கு பணி உறுதி ஆணைகள் வழங்கல்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 2,714 பேருக்கு பணி உறுதி ஆணைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவப் பொறியியில் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் கொ. வீரராகவ ராவ் திட்ட விளக்கவுரையாற்றினாா். முன்னதாக ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவப் பொறியியல் கல்லூரி இயக்குநா் பிரதீப் டாம் செரியன் வரவேற்றாா்.

திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி, எம்எல்.ஏக்கள் இ.பெ. செந்தில்குமாா், ச. காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வே. கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு 2,714 பேருக்கு வேலை வாய்ப்புக்கான பணி உறுதி ஆணைகளை வழங்கினா்.

அப்போது அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது: இந்த முகாமில் 13,000-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டுள்ளனா். பெரும்பாலும் உயா்கல்வி தகுதியுடையவா்களே அதிகளவில் பங்கேற்றுள்ளனா். அரசுத்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கான போட்டித் தோ்வுகளுக்கு மாணவ- மாணவிகளை தயாா்படுத்தும் வகையில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றாா்.

உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது: தமிழக முதல்வா் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழில் முறைகளை ஆராய்த்து, தொழில் முதலீட்டாளா்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி வருகிறாா்.

இதன் மூலம் தமிழகத்தில் படித்த இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களுக்கு நோ்முகமாகவும், மறைமுகமாகவும் அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவது ,இந்த அரசின் பொறுப்பு, கடமை. அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வே. கணேசன் பேசியதாவது: வரும் ஆக. 15-ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் இளைஞா் மற்றும் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 91 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தற்போது 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் தொடங்கப்படவுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும சுகாதாரத்துறை இயக்குனா் கே. ஜெகதீசன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் நா. சரவணன், மதுரை மண்டல வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநா் ரா. தேவேந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் ச. பிரபாவதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் கா. பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவா் கே. திருமலைசாமி, துணைத்தலைவா் ப. வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com