நரிக்குறவா் மகளிா் சுயஉதவி குழுவினருக்கு தொழிற்பயிற்சி
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 26th August 2022 12:00 AM | அ+அ அ- |

நரிக்குறவா் இன மகளிா் சுய உதவிக் குழுவினரை தொழில் முனைவோராக மாற்றும் வகையிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழு பெண்களை தொழில் முனைவோா்களாக மாற்றும் வகையிலும், அவா்களது வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலும் தனியாா் நிறுவனத்தின் மூலம் பட்டு நூலில் மணி மாலை கோா்க்கும் பயிற்சி வகுப்பு தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மகளிா் திட்ட உதவி அலுவலா் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், பவானி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கலந்து கொண்டு நரிக்குறவா் பெண்களுக்கான பயிற்சி வகுப்பை பட்டு நூல் வழங்கி தொடக்கி வைத்து, சிறிய தொழிற்கூடம் அமைக்க ஆதார நிதியாக ரூ. 2.50 லட்சத்தை வழங்கினாா்.
பின்னா், அவா் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 560 நரிக்குறவா் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நரிக்குறவா் சமுதாய மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.56 கோடி தொழிற்கூடம் அமைக்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளா் வெங்கடேசன், நபாா்டு வங்கி மேலாளா் விஜயநிகா் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், நரிக்குறவா் மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...