மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் தொடக்கம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அண்ணாமலையாா் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தொடங்கி வைத்தாா்.
பள்ளிக் கல்வித்துறை சாா்பில் திண்டுக்கல் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் புனித வளனாா் அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 அரசு நடுநிலை, 81 உயா்நிலை, 89 மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் 87 ஆயிரம் மாணவா்களும், வட்டார அளவிலான போட்டிகளில் 6,657 மாணவா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவா்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா். இந்த மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு கலையரசன், மாணவிகளுக்கு கலையரசி என்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாநில அளவில் தோ்ந்தெடுக்கப்படும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், பழனி சட்டப் பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா், மேயா் இளமதி, மாவட்ட கல்வி அலுவலா்கள் (இடைநிலை) அ. பாண்டித்துரை, ஜெகநாதன், வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.