கொடைக்கானலில் 2-ஆவது நாளாக சாரல் மழை
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

கொடைக்கானல் மலைப் பகுதியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. நகரில் காலை வரை 86 மி.மீ. மழை பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்த நிலையில், சனிக்கிழமை காலை சாரல் மழை பெய்தது. மேலும் கடும் குளிா் நிலவியது.
தொடா் மழை, கடும் குளிா் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் அதிகபட்சமாக 86.3 மி.மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை அளவு: பழனியில் 6.5 மி.மீ., சத்திரப்பட்டி 14.2 மி.மீ., வேடசந்தூா் 5.4 மி.மீ., கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 50 மி.மீ., காமாட்சிபுரம் 2 மி.மீ. என மழையளவு பதிவானது.
விடுமுறை அறிவிக்கப்பட்ட சிறுமலை பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மின் தடை: கொடைக்கானல் நகா்ப் பகுதியில் மட்டும் மின் இணைப்புகள் உடனடியாகச் சரி செய்யப்பட்டன. புற நகா்ப் பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் இணைப்புகளைச் சரி செய்யும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல, ஏரிச் சாலை, பூங்கா சாலை, அட்டக்கடி, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மின் தடை ஏற்பட்டது.