பழனி மலைக் கோயிலில் உபகோயில்களுக்கு பாலாலயம்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

பழனி மலைக் கோயிலில் உள்ள உபகோயில்களில் சனிக்கிழமை பாலாலய பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) யாக வேள்வி நிறைவு, பாலாலயம் ஆகியவை நடைபெறுகின்றன.
பழனி மலைக் கோயிலில் வரும் ஜனவரி மாதம் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதற்காக கோயில் பிரகாரங்களில் உள்ள சுதைகள், கோபுரங்களில் உள்ள சுதைகள் சீரமைக்கப்பட்டு புதிய வா்ணம் பூசப்பட்டது. அதே போல தங்கக் கோபுரமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மலைக் கோயிலில் கைலாசநாதா் சந்நிதி, நின்ற விநாயகா் சந்நிதி உள்ளிட்ட ஏராளமான உபகோயில்கள் உள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி இந்த கோயில்களிலும், படிப்பாதையில் உள்ள சந்நிதிகளிலும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாலை பிரஹந்நாயகியம்மன், பிரகதீஸ்வரா் சந்நிதி, படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், சிவகிரீஸ்வரா், விநாயகா், வள்ளியம்மை சந்நிதிக்கு பாலாலய பூஜைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு மேல் மூலவா் சந்நிதியில் உள்ள விநாயகா், மூலவா் உள்ளிட்டோரிடம் அனுமதி பெறப்பட்டு பாரவேல் மண்டபத்தில் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. மேலும் கலாகா்ஷணம் செய்து யாக குண்டம் வளா்க்கப்பட்டு முதல் கால பூஜை நடைபெற்றது.
யாகத்தில் மூலிகைகள், கனி வகைகள் போடப்பட்டு வேள்வி நிறைவடைந்ததும், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தபராஜ பண்டிதா் அமிா்தலிங்கம், ஸ்தானீகா் செல்வசுப்ரமண்யம் தலைமையில் சிவாச்சாரியா்கள் செய்தனா்.
இதில் இரண்டாம் கால பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டதும், வேள்வி நிறைவு செய்யப்பட்டு கலசங்கள் உலா வந்ததும் பாலாலயம் எனப்படும் பாலஸ்தாபனம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமையில் துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.