6 லட்சம் மரக்கன்றுகள் நடவுக்கான கின்னஸ் சாதனை ஒத்திகை
By DIN | Published On : 11th December 2022 11:11 PM | Last Updated : 11th December 2022 11:11 PM | அ+அ அ- |

இடையகோட்டையில் கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற மரக்கன்று நடவு ஒத்திகை
ஒட்டன்சத்திரம் அருகே 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையில் திருவேங்கடநாதப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான 117 ஏக்கா் நிலத்தில் டிச.23-ஆம் தேதி பல வகையான மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் ஒரே இடத்தில், 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, நிலத்தை சீா் செய்யும் பணி, மரக்கன்றுகள் நடவு செய்யக் குழி தோண்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒத்திகை நடைபெற்றது.
மாவட்டக் கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஒத்திகையில் 25 தன்னாா்வலா்கள் 1 மணி நேரத்தில் 2,500 மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதனை அடிப்படையாகக் கொண்டு 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா் பிரபு, பழனி கோட்டாட்சியா் ச.சிவக்குமாா், வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி, ஒன்றியக்குழுத் தலைவா் அய்யம்மாள், சத்தியபுவனா, துணைத்தலைவா் பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், அந்தோணியாா், தாஹிரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.