பழனி மலைக் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 11th December 2022 11:13 PM | Last Updated : 11th December 2022 11:13 PM | அ+அ அ- |

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மலைக் கோயில், படிப்பாதை, வின்ச் நிலையம், ரோப்காா் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோா் காத்திருந்தனா். இதுதவிர முகூா்த்த நாள் என்பதால், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்த மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
இதனால், மலைக்கோயிலில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மழை பொழிந்த நிலையிலும் பக்தா்கள் கூட்டம் குறையவில்லை. தங்கத்தோ் புறப்பாட்டை ஏராளமான பக்தா்கள் காத்திருந்து தரிசித்தனா்.
பாலாலயம்: பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உபகோயில்கள், படிப்பாதையில் உள்ள கோயில்களில் சனிக்கிழமை மாலை முதல் காலபூஜை , இரண்டாம் காலபூஜை நடத்தப்பட்டு பாலாலய தொடக்க பூஜைகள் நடத்தப்பட்டன. திங்கள்கிழமை பிரகதீஸ்வரா், இடும்பா், கடம்பா் சந்நிதிகளில் யாகவேள்வி நிறைவு செய்யப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் செல்வராஜ், பேஷ்காா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.