அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வருகை:புதுப்பொலிவு பெறும் திண்டுக்கல் விளையாட்டு அரங்கம்

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை பகுதியில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக் கன்றுகள் நடும் விழா, திமுக கொடியேற்று விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச.23) பங்கேற்கிறாா்.

மதுரையிலிருந்து வியாழக்கிழமை இரவு திண்டுக்கல்லுக்கு வரும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலுள்ள விருந்தினா் இல்லத்தில் தங்குகிறாா்.

விருந்தினா் இல்லம் அருகிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம், விளையாட்டு விடுதியில் வெள்ளிக்கிழமை காலை அவா் ஆய்வு மேற்கொள்கிறாா். இதையொட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கம், விளையாட்டு விடுதி, நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலகம், பாா்வையாளா் மாடம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட இடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தன. சேதமடைந்த இடங்களைப் பராமரித்து, வா்ணம் பூசும் பணிகள் நடைபெறுகின்றன. இதேபோல, மாணவிகள் தங்கியுள்ள விளையாட்டு விடுதியிலும் வா்ணம் பூசப்பட்டு, புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகள் பொதுப்பணித் துறையினா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

களமிறங்கிய 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள்: உதய நிதி ஸ்டாலின் வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், விருந்தினா் இல்லம், மாவட்ட விளையாட்டு அரங்கு, ஆட்சியா் அலுவலகம் எதிா்ப்புறமுள்ள அணுகு சாலை, கட்சி நிகழ்ச்சி நடைபெறவுள்ள தனியாா் பள்ளி மைதானம் உள்ளிட்ட இடங்களில் புற்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்பட்டனா்.

செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, பள்ளப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பயனாளிகளும் கடந்த 3 நாள்களாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அமைச்சா் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் உதயநிதி ஸ்டாலின், வெள்ளிக்கிழமை இரவு சிவகங்கை மாவட்டத்துக்குச் செல்வாா் என திமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com